

உன் பிஞ்சு விரல்களின் மென்மையை,
நான் ,
பல வண்ணம் கொண்ட மலரிலும்
சூழ்ந்து வந்த மேகத்திலும்
பனி பொழியும் வானத்திலும் தேடினேன்
பூமி உருண்டையாம்
இப்பக்கம் துளை போட்டால்
அப்பக்கம், உன் வீடு வருமா ?
என்று கூகுளில் தேடினேன்
இப்போதெல்லாம் நான் எதையும்
மனப்பாடம் செய்வதில்லை
என் மனதில் நீ இருக்கும் இடத்தில்
அது பதிந்து விடுமோ என்ற பயத்தில்
எனக்கு ஆறுதல் சொல்ல
உன் புகைப்படம் அனுப்பினாள்
உன் அம்மா , கிறுக்கு
நிலவின் படம் காட்டினால்
மலருமா மல்லிகை ?
உன் கை ரேகையில்
என் முத்தம் கலக்க
எத்தனித்து , என் இதழில்
தேன் சுரக்கிறது
கண்ணா , கிருஷ்ணா
அன்று நான் என் வீட்டு தரையில்
வரைந்தது உன் பாத சுவடுகளோ ?
இருக்கும் , அதில் அத்தனை சுவையாம்
எறும்புகள் சொல்லக் கேட்டேன்
எனக்குத் தெரியும்
தமிழை விட உன் மழலையில்
இந்தக் கவிதைக்குச் சுவை அதிகம்
உன் மழலை மொழி தாராயோ ?
உதவி : ஜனனி
No comments:
Post a Comment